“நிகழ்நிலை கல்விக்காக அபாயகரமான இலங்கைச் சிறுவர்கள் அபாயகரமான உயரங்களுக்கு ஏற வேண்டியுள்ளது,” இவ்வாறான தலைப்பில் அண்மையில் அல் - ஜெஸீரா செய்தி நிறுவனம் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த கட்டுரையும் இது போன்ற பல கட்டுரைகளும் சமூக ஊடகங்களில் புகைப்படத் தொகுப்பு ஒன்று வலம் வந்ததை தொடர்ந்து வெளி வந்தன. அப்புகைப்படங்களில் இலங்கையின் கஷ்டப் பிரதேசங்களில் உள்ள சிறுவர்கள் சிறந்த இணைய இணைப்பை அடைந்து கொள்வதற்காக தமது கிராமங்களில் உள்ள உயர்ந்த இடங்களை சென்றடையும் நோக்கில் வானளாவ வளர்ந்த உயர்ந்த மரங்களின் உச்சிக் கிளைகளில் ஏறியிருந்தமை காண்பிக்கப்பட்டிருந்தது. இது தொற்று நோய் நிலையில் நிகழ்நிலை கல்விக்கான அணுகலை பெற்றுக்கொள்வதில் சில சிறுவர்கள் எதிர்நோக்கிய போராட்டத்தை கச்சிதமாக காண்பித்திருந்தது.
இதே நேரத்தில் இன்னொரு புகைப்பட தொகுதி ஒன்றும் சமூக ஊடகங்களில் மிக வேகமாக பரவலடைந்தது, ஆனால் இந்த அசாதாரண பரவலுக்கான காரணம் வித்தியாசமானதாக அமைந்திருந்தது. இலங்கையின் சுகாதாரத் துறையினர் அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான மலைப் பிரதேசங்களின் ஊடாக உயிர் காக்கும் கோவிட்-19 வக்சீன்களை சென்றடைய கடினமான இடங்களுக்கு கொண்டு சென்று விநியோகித்தமை இந்த புகைப்படங்களில் காண்பிக்கப்பட்டிருந்தது.
தொற்று நோய்க்கு எதிராக யதார்த்த உலகில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான செயற்பாடுகள் மனித மூலதனத்தின் சக்தியை எமக்கு கோடிட்டுக் காட்டுகின்றன. அர்ப்பணிப்பு, தாங்குதிறன் மற்றும் விடாமுயற்சி பற்றிய இக்கதைகள் இலங்கையின் மிகப் பெறுமதி மிக்க சொத்து அதன் மக்களே என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி எமக்கு பறைசாற்றுகின்றன.
கட்டமைப்பு சவால்கள் உள்ளமையை எமக்கு சுட்டிக்காட்டுகின்றது. உதாரணமாக, சேவை விநியோக முறைமைகளின் மட்டுப்படுத்தப்பட்ட தயார்நிலை மற்றும் இயங்குதிறன் என்பவற்றை தொற்றுநோய் எமக்கு வெளிப்படுத்தியது. இருந்த போதும், மீளாய்வு செய்தல், திருத்திக்கொள்ளல் மற்றும் மீள்நேராக்கம் செய்தல் என்பவற்றுக்கான தனித்துவம் மிக்க வாய்ப்பினை இதொற்றுநோய் எமக்கு வழங்கியுள்ளதையும் நாம் மறந்துவிடலாகாது.
இந்த முக்கிய காலகட்டத்தில் மனித மூலதனக் காரணிகள் செயற்படுகளில் எவ்வாறு ஒன்றித்துள்ளன என்பதை கருத்திற் கொள்வது முக்கியமானது. மனித மூலதனத்தில் மக்கள் தமது வாழ்நாளில் சேகரித்துக்கொண்ட அறிவு, திறன்கள், மற்றும் ஆரோக்கியம் என்பன உள்ளடங்குகின்றன. மனித மூலதனத்தில் முதலீடு செய்வது என்பதன் பொருள் மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக சேவைகளை வழங்குதல், சிறந்த தரம் மிக்க கல்விக்கான அணுகலை வழங்குதல், அத்துடன் மக்களின் வேறுபட்ட வாழ்க்கை காலப்பகுதிகளில் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு சமூக ஆதரவு சேவைகளை விநியோகித்தல் போன்ற விடயங்களை மேற்கொள்வதை குறிக்கின்றது. மேலும் அது பாதிப்புறும் ஏதுநிலையில் உள்ள சனத்தொகைகள் நெருக்கடி நிலைகளில் ஆதரவை பெற்றுக்கொள்ளும் வகையில் முன்னரான இடையீடுகளை சாத்தியமாக்கும் முறைமைகளை உருவாக்குவதையும் குறிக்கின்றது.
இலங்கையில் பொதுச்சுகாதார வசதிகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் சிறந்த அடைவுகளை எமக்கு வழங்கியுள்ளது. உலகில் மிகச்சிறந்த சுகாதார குறிகாட்டிகளில் ஒன்றைக் கொண்டுள்ள இலங்கை போலியோ மற்றும் மலேரியா ஆகிய நோய்களை வெற்றிகரமாக அகற்றியுள்ளது. இந்நாடு தற்பொழுது 20 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 89 சதவீதமானவர்களுக்கு கோவிட் -19 தடுப்பு மருந்தை வழங்கியுள்ளது. இலங்கை பொதுச்சுகாதார வசதிகளில் தனது உள்நாட்டு மொத்த தேசிய உற்பத்தியில் 1.5 சதவீதத்தை மாத்திரம் மேற்கொள்ளும் நிலையில் இவ்வகையான வெற்றிகளை அடைந்துள்ளது ஆச்சரியமளிக்கும் விடயமாகும், இவ்வாறான முதலீடுகள் தெற்காசிய நாடுகள் மேற்கொள்ளும் முதலீட்டு சராசரியிலும் மிகவும் குறைவானதாகும்.
மிகவும் குறைவான முதலீட்டில் இந்நாடு பேண்தகு தன்மை மிக்க உயர் நியமங்களை அடைந்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாக இருக்கின்ற அதே வேளை இந்த முறைமை விரைவில் புதிய சவால்களை எதிர்கொள்ளவுள்ள நிலையில் காணப்படுவதும் கருத்திற்கொள்ளப்பட வேண்டும். இலங்கையின் சனத்தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது, அத்துடன் 2035 ஆம் ஆண்டளவில் நான்கில் ஒரு இலங்கையர் 60 வயதுக்கும் மேற்பட்டவராக காணப்படுவார். நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டோரின் வீதம் மற்றும் அவற்றால் ஏற்படும் இறப்பு வீதம் என்பன அதிகரிக்கும் நிலை எதிர்வு கூறப்பட்டுள்ளது. எனவே மாற்றமடையும் தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் என்பவற்றுக்கு சுகாதார முறைமை எதிர்வினையாற்ற மற்றும் ஏற்ற வகையில் செயற்பட மேலதிக முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது.
சனத்தொகையின் வயது முதிர்வு குடும்ப அலகுகளையும் பாதிக்கும் தன்மை கொண்டது. குடும்ப கட்டமைப்புகள் மற்றும் பாரம்பரியமான சமூக ஆதரவு முறைமைகள் மாற்றமடைந்து வரும் நிலையில் இலங்கையின் குடும்பங்களுக்கு, விசேடமாக பெண்களுக்கு வீடுகளுக்கு வெளியே கிடைக்கும் ஆதரவு அதிகரிக்கப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. இலங்கையில் பெண்கள் கல்வியில் அதிக அடைவுகளை அடைகின்ற போதும் இலங்கையின் தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்கேற்பு வீதம் 2020 இல் 32 சதவீதமாகவே காணப்படுகின்றது. இவ்விடயத்தில் ஆண்களின் பங்கேற்பு 72 சதவீதமாக அமைந்துள்ளது. சனத்தொகை முதிர்வடையும் நிலையில் குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோரின் பராமரிப்பு பணிகளையும் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது. குடும்பங்களின் சுமையினைக் குறைக்கும் வகையில் குழந்தை பராமரிப்பு ஆதரவு மற்றும் சமூக நலன்புரி சேவைகள் குறிப்பிடத்தக்க அளவில் மீள்கட்டமைக்கப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது.
கல்வியிலும் முன்னேற்றம் மிக்க மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. கல்வியில் காணப்படும் சமத்துவமின்மைகள் நிகழ்நிலை கல்வி இயங்கு தலங்களுக்கு அப்பாலும் பரவிக் காணப்படுகின்றன, கிராமப்புற சிறுவர்கள் எதிர்கொள்ளும் இணைய இணைப்பு தொடர்பான பிரச்சினைகள் பரந்த பிரச்சினை ஒன்றின் வெறும் அறிகுறி மாத்திரமேயாகும். ஆரம்ப நிலை மற்றும் இரண்டாம் நிலை கல்வியில் இணைவோரின் வீதம் என்பன கிட்டத்தட்ட சமனாக காணப்பட்ட போதும் கல்வியின் தரத்தில் பாரிய சமமின்மைகள் காணப்படுகின்றன, இதன் விளைவாக வேறுபட்ட புவியியல் பிரதேசங்கள் மற்றும் வருமான மாற்றங்களை சேர்ந்த பிள்ளைகளின் கற்றல் வெளியீடுகளில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன.
இலங்கையில் பாடசாலை கல்வி வழங்கப்பட எதிர்பார்க்கப்படும் வருடங்கள் 13.2 ஆக இருக்கும் நிலையில் கற்றல் மாற்றியமைக்கப்பட்ட பாடசாலை வருடங்கள் 8.5 வருடங்களாக மாத்திரம் காணப்படுவதை 2020 ஆம் ஆண்டின் மனித மூலதன அறிக்கை குறித்துக்காட்டுகின்றது. இது 4.7 வருடங்கள் கற்றல் இழப்பு ஏற்படுவதை சுட்டிக்காட்டுவதுடன் இவ்விழப்பு தெற்காசியாவிலேயே மிகவும் உயர்ந்ததாக அமைந்துள்ளது. தொற்றுநோய் காரணமாக பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டமை இவ்விழப்பை மேலும் அதிகரிக்கும் என்பதை எம்மால் அனுமானிக்க முடியும். இலங்கை கல்வியில் செலவிடும் தொகை (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7 சதவீதம்) இது தொடர்பில் காணப்படும் தெற்காசிய சராசரியிலும் குறைவானதாகும். கல்வியின் அனைத்து மட்டங்களிலும் முதலிடும் தொகையை அதிகரிப்பதன் மூலம் நாடு நன்மையடைய முடியும். முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை கல்வியின் தரத்தை மேம்படுத்தல், அத்துடன் உயர்கல்வியை மீள்திசையாக்கம் செய்தல் என்பன கற்றல் இழப்புகளை ஈடுசெய்ய மற்றும் கற்றல் வெளியீடுகளை மேம்படுத்த உதவ முடியும்.
முறைசார் கல்விக்கு அப்பால், தொழிற்கல்வி மற்றும் பயிற்சியில் முதலீடுகளை மேற்கொள்ளல் வேலை பெறும் தன்மையை அதிகரிப்பதுடன் மாற்று வாய்ப்புகளையும் மேம்படுத்தும். கடந்த இரண்டு வருடங்களில் மேலெழுந்த உள்ளூர் வியாபார ஆரம்பிப்புகள், வீட்டு வர்த்தகங்கள் மற்றும் இணைய அடிப்படையில் அமைந்த சேவைகள் என்பன இலங்கையின் புத்தாக்க இயலுமைகளை எமக்கு கோடிட்டுக் காட்டுகின்றன. சுய தொழில் மற்றும் தொழில்முனைவாக்கம் என்பவற்றை ஆதரித்தல் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்த விழைவோருக்கு புதிய பாதைகளை திறந்து விடும். சமுர்த்தி நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக மிகவும் வறிய மற்றும் பாதிப்புறும் ஏதுநிலையில் உள்ள மக்களை இலக்கு வைத்து முழுமையான வாழ்வாதார ஆதரவினை வழங்குவதும்ம் இதில் உள்ளடங்குகின்றது.
முன்யோசனை மிக்க சிந்தனை மற்றும் மனித மூலதனத்தில் உள்வாங்கும் தன்மை மிக்க முதலீடுகள் என்பன மீட்சிப் பாதைக்கு ஆதரவளிக்கும் விடயங்களாகும். தொற்றுநோயில் இருந்து ஒரு பாடத்தை கற்க முடியுமானால் அது மக்களில் முதலீடுகளை மேற்கொள்ளல் என்பதேயாகும். இதன் மூலமாக அல்லலுறும் மக்கள் ஏனையோருக்கு உதவும் நிலைக்கு மாற்றமடைவார்கள்.
இது முதலீடுகளை மேற்கொள்ள தகுதி மிக்க தெளிவான விடயமாகும்.
Join the Conversation