அண்மையில் இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் இலங்கை அணியினர் சிறப்பாகச் செயற்பட்டதாக சிலர் எண்ணம் கொண்டிருக்கலாம். அதில் நானும் அடங்குகின்றேன். ஆயினும் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும், ஏன் எமது அலுவலகத்தில் கூட காரசாரமான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு அவர்கள் அனைவருமே அணியினது பெறுபேறுகள் விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதை தெளிவாக்குகின்றது.
தமது கருத்துக்களில் வேறுபாடுகளைக் கொண்டிருந்த போதிலும் உலகின் பல்வேறு பாகங்களில் இருக்கும் எனது பல சகபணியாளர்களும், நண்பர்களும் போட்டிகளில் உற்சாகத்தை வெளிப்படுத்தியும் எதிரணிகளை ஆதரித்தும் போட்டிகளை ஆய்வுக்குட்படுத்தியும், போட்டியைப் பாதிக்கும் களத்திற்கு வெளியிலான அரசியல் நிலைகுறித்து கருத்துக்களை வெளிப்படுத்தியும், வெற்றி ஈட்டியவர்கள் தோல்வியடைந்தவர்கள் குறித்து தீர்ப்பிடும் வகையிலான கருத்துக்களை வெளிப்படுத்தியும், தமது ஆர்வத்தைக் கண்ணுற்றிருந்தேன். ஏனைய அணிகளுடன் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்பதற்கு இலங்கை அணியானது சர்வதேச ரீதியில் முதல் எட்டு இடங்களுக்குள் இடம்பெறவேண்டியது அத்தியாவசியமானது என்பதே இங்கு முக்கியமான விடயமாகும். எவ்வாறு பொருளாதாரம் வளர்ச்சி காண்கின்றது மற்றும் அங்கீரிக்கப்படுகின்றது என்பதற்கு இந்த ஒப்பீடானது பொருத்தமானதாக அமைந்துள்ளது. ஆகவே இந்த சிந்தனைகளை நினைவில் நிறுத்திவைத்துக்கொள்ளுங்கள்.
பத்திரிகைகள் இணையத்தளங்களில் பல கட்டுரைகளைப் படித்தபோது சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துப் பகிர்வுகளை வாசித்தபோது ஒரு விடயம் தெளிவாக புலனாகியது. அது என்னவென்றால் இலங்கை எவ்வாறு வளர்ச்சி காண்கின்றது என்பது தொடர்பாக எந்தவகையிலான ஒருமித்த கருத்துக்களும் கிடையாது. இவற்றுடன் 4.4 சதவீத வளர்ச்சி வீதம் தொடர்பில் அபிவிருத்தியடைந்த நாடுகள் திருப்திப்பட்டுக்கொண்டாலும் இலங்கையில் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதற்கு மிகவும் குறைவானதாகவே நோக்கப்படும். இது வளர்ச்சி காண்கின்றதா என சிலர் கேள்வியெழுப்புகின்றனர். மாறாக அது தொடர்பில் பல்வேறு கருத்துநிலைப்பாடுகள் காணப்படுகின்றன. நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டுள்ள இந்த விடயம் தொடர்பில் குழப்பமான நிலைமைக்கு இது வழிகோலிநிற்கின்றது.
வருடத்திற்கு இரு தடவைகள் உலக வங்கியானது தரவுகளையும் ஆய்வுகளையும் பலரின் நன்மைகருதி தகவல் மூலத்தில் இணைத்துக்கொண்டுவருகின்றது. இலங்கையின் உண்மையான வளர்ச்சி நிலை என்ன? பொருளாதாரத்தில் எந்தப் பாகம் வளர்ச்சி கண்டுள்ளது. எந்தப்பகுதி வளர்ச்சி காணவில்லை? நாட்டின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த வேண்டுமாயின் செய்யவேண்டியது என்ன? இதற்கு உதவுவதற்கு நாட்டிலுள்ள மக்களால் என்ன செய்யமுடியும்? போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு நாம் முற்படுகின்றோம்.
கிரிக்கட் விளையாட்டிலிருந்து நாம் விளங்கிக்கொள்வது யாதென்றால் வீரர்கள் திறமைமிக்கவர்களாக திகழ்ந்தாலும் அவர்களுக்கு உற்சாகமளிப்பதற்கு யாரும் இல்லாது விட்டால் அவர்கள் விளையாட்டில் ஆர்வம் குன்றி வெற்றிகரமானவர்களாக திகழமுடியாது போகும். இந்த நிலைமை ஈற்றில் விளையாட்டின் மீதான அபிமானம் இல்லாது போய் நாட்டின் தரநிலைக்கு உரித்தான போட்டித்தன்மை வீழ்ச்சிகாணும். எந்த விடயத்தை சாதிக்க வேண்டும், எப்படிச் சாதிக்க வேண்டும், யார் அதனைச் செய்யவேண்டும். போட்டியின் போது அணியினால் சிறப்பாக செயற்பட முடியாது போகுமிடத்து, போட்டியில் எந்த பகுதியை அவர்கள் மாற்றியமைக்க வேண்டும் என்பதை இரு தரப்பினரும் விளங்கிக்கொள்ளவேண்டும். இந்த அம்சங்கள் தான் இலங்கையை இன்று கிரிக்கட் விளையாட்டுலகில் ஒரு பலமான சக்தியாக நிலைநிறுத்தியுள்ளது.
எமது ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கை வளர்ச்சி கண்டுவருகின்றது ஆனால் வளர்ச்சி வேகம் இன்னமும் அதிகமாக இருக்கமுடியும். சீரற்ற காலநிலையானது வளர்ச்சிக்கு தடங்கலை ஏற்படுத்தியுள்ள போதிலும் வளர்வதற்கு இன்னமும் பல சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. சர்வதேச ரீதியில் புகழ்பெற்று விளங்கவேண்டுமாயின் சர்வதேச தளத்தில் நீங்கள் களம்கண்டாக வேண்டும். இலங்கை அதன் எல்லைகளுக்கு அப்பாலும் போட்டித்தன்மைமிக்கதாக திகழவேண்டும் என்பதுடன் அதன் வர்த்தக சாத்தியக்கூறுகளை முன்னேற்றிக்கொள்ளவேண்டும். திறன் விருத்தியில் அது முதலீடு செய்யவேண்டும். கிரிக்கட் அணிகள் பயிற்சிகளில் ஈடுபடாமல் போட்டி நடைபெறும் நாளில் வந்திறங்கினால் என்ன நடக்கும் என்பதையோ அணிகள் தமது போட்டி வியூகங்களை மாற்றியமைக்காது தினமும் ஒரேவகையான விளையாட்டை வெளிப்படுத்தினால் என்ன நடக்கும் என்பதையோ சிந்தித்துப்பாருங்கள். அவ்வாறான சந்தர்பங்களில் வெற்றிபெறும் சாத்தியக் கூறு இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமுண்டு. அத்தியாவசியமான சீர்திருத்தங்கள் அனைத்தையும் செய்யமுடியும் என்பதை இலங்கை வெளிக்காண்பித்துள்ளதுடன் அப்போது உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக திகழமுடியும் என்பதையும் எடுத்துணர்த்தியுள்ளது. தேயிலை சுற்றுலாத்துறை ஆகியன உடனே நினைவில் வருகின்றன தற்போது மீளக் கிடைத்துள்ள ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையானது மேலும் பல சந்தர்ப்பங்களுக்கு வழிகோலும் என்பதில் ஐயமில்லை. கதவுகள் திறக்கப்பட்ட பின்னர் அனேகமான இலங்கையர்கள் பயன்பெறுவர்.
அபிவிருத்தி குறித்த பிந்திய தகவல்களைத் தாங்கிய எமது தொகுப்பானது எதிர்வரும் சில நாட்களில் வெளியிட்டுவைக்கப்படவுள்ளது. இது மிகவும் ஆக்கபூர்வமான தரவுகளைக் கொண்டிருக்கும் என நான் நம்புகின்றேன். முக்கியமாக இலங்கை வளர்ச்சி காண்கின்றதென்ற முடிவிற்கு துணைசேர்க்கின்ற தரவுகளையும் ஆய்வுகளையும் தாங்கி நிற்பதாக இது அமையும். இலங்கை இன்னமும் அதிகமாக வளர்ச்சிகாணமுடியும் என்பதையும் இந்த தகவல்கள் எடுத்தியம்புகின்றன.
இத்தனைக்கு மத்தியிலும் சர்வதேச வரைபடத்தில் சிறிய அளவைக் கொண்டிருந்தபோதிலும் இலங்கை போன்ற ஒரு நாடானது சர்வதேச மட்டத்தில் கிரிக்கட் விளையாட்டு என்று வரும்போது தொடர்ந்துமே பெரிதும் பிரகாசித்துவருவதே ஒரு சாதனை என நான் கருதுகின்றேன். அவ்வப்போது வெளிப்படுத்தப்படும் மோசமான ஆட்டமானது அணியைத் துவளச் செய்துவிடாது. அணியை மேலும் உறுதிப்பாடுகொண்டதாக மாற்றுவதற்கு வழிகோலுகின்ற படிக்கற்களாகவே அமையும்.
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் எனக் கூறுங்கள்.
Join the Conversation