இந்த வருடத்தின் முதல் ஆறுமாத காலப்பகுதியில் இலங்கையில் வரட்சி, மண்சரிவு, குப்பை மேடு சரிவு ,வெள்ளப்பெருக்கு போன்ற பல பாரிய அனர்த்தங்கள் இடம்பெற்றன. பாதிக்கப்பட்டவர்களைத் தவிர ஏனையோரின் கவனத்தைப் பெறாதளவில் மேலும் பல அனர்த்தங்களும் இடம்பெற்றன. இலங்கையர்கள் எதிர்கொண்ட இவ் அனர்த்தங்கள் சுற்றாடலை நாம் எங்ஙனம் பேணிக்காக்க வேண்டும் என்பதை அச்சொட்டாக வலியுறுத்தி நிற்கின்றன. உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் ஏற்பட்ட சேதங்கள், வாழ்க்கைச் சக்கரத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள், உளவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மிகவும் கடினமானவை. எப்போதேனும் இவற்றை வழமைக்கு கொண்டுவருவது மெதுவான செயற்பாடாக அமையும்.
நிலைபேறான சுற்றாடல் முகாமைத்துவம் தொடர்பான சிந்தனைகளை ஆண்டில் ஒரு நாளுக்கு மாத்திரம் நாம் ஏன் மட்டுப்படுத்தவேண்டும்? நகரப்பகுதிகள், ஆறுகள் அன்றேல் கடலில் இருந்து குப்பைகளைச் சேகரித்தல், தொண்டுநோக்கிற்கான நடைபவனியில் பங்கேற்றல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமாக நாம் வழமையாக சுற்றாடல் தினத்தைக் கொண்டாடுகின்றோம். இந்த ஒருநாளில் சுற்றாடல் குறித்த ஆர்வம் கட்டியெழுப்பப்படுகின்றது. அனைவரும் பங்கேற்கின்றனர். மறுநாளோ வேறு முக்கியத்துவம் மிக்க விடயங்களை நோக்கி அவர்களின் கவனம் நகர்ந்துவிடுகின்றது. அடுத்த கட்ட அனர்த்தம் நிகழும் வரையில் அவர்களது கவனம் வேறுவிடயங்களில் இருக்கும். மீண்டுமாக ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றஞ்சாட்டுதல் ஆரம்பிக்கும்.
பிரச்சனையின் ஓர் அங்கமாகவும் தீர்வின் ஓர் அங்கமாகவும் நாம் எம்மைப் பார்க்கும் வரையில் எதுவுமே மாறப் போவதில்லை. இவ்வாறான பல விடயங்களில் நாம் தினமும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கழிவுகள் பற்றி அவதானம் செலுத்துவோம். எமது இல்லங்களில் தனிப்பட்ட ரீதியில் நாம் அனைவரும் கழிவுகளை உருவாக்குகின்றோம். எம்மைப் பொறுத்தவரையில் குப்பை பைக்குள் கழிவுகளைக் கொட்டி அகற்றிவிட்டவுடன் அந்தப் பிரச்சனை எமக்கில்லை. உண்மையில் கூறுவதானால் அது பொதுமக்களின் பிரச்சனையாக மாறுகின்றது. கழிவுகளை வீட்டிற்குள்ளேயே நாம் மக்கிப் போகின்றவை எனவும் மீள்சுழற்சிக்குட்படுத்தக்கூடியவை மற்றும் எஞ்சியவை எனத் தனித்தனியே வேறுபிரிப்பதற்கான சாதாரணமான அர்ப்பணிப்பைக் காண்பிப்போமானால் அவை ஒழுங்கான முறையில் சேகரிக்கப்பட்டு அகற்றப்படுமானால் ஒட்டுமொத்த கழிவுகளின் அளவைக் கணிசமாகக் குறைத்துக்கொள்ள முடியும். கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் உரத்தைக் கொண்டு தோட்டங்களையும் பயிர்களையும் செழிப்படையச் செய்யலாம்.
நாங்கள் பயணம் மேற்கொள்ளும் போது நாம் சர்வசாதாரணமாக வீசியெறிகின்ற கழிவுப்பொருட்களைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? அவை கழிவுநீர் செல்லும் வழிகளைச் சென்றடைகின்றன. அவற்றை அடைப்பதுடன் வெள்ளநிலைமையை மோசமடையச் செய்கின்றன. கழிவகற்றும் செயற்பாட்டை பாதிக்கின்றன. அன்றேல் அழகிற்காக பெருமைகொள்கின்ற தேசத்தை சீர்குலைக்கின்றன. கடல்களிலும் சமுத்திரங்களிலும் கழிவுகள் சுற்றாடலை மாசுபடுத்தி அதன் தரத்தை சீரழிக்கின்றன. இப்படியிருக்கையில் ஒவ்வொரு முறையும் சுற்றாடல் தினம் வரும்வரையில் காத்திருந்த பின்னரா நாம் சென்று கழிவுகளைச் சேகரிக்கப்போகின்றோம் ? என நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
சுற்றாடல் தினத்தன்று முன்னெடுக்கும் செயற்பாடுகளைத் தொடர்ந்து எம்மிடத்தே குடிகொள்கின்ற செயற்திறனற்றதன்மையை மாற்றியமைக்க முன்வரவேண்டும் என நான் அனைவருக்கும் சவால் விடுக்கின்றேன்.
எனது யோசனைத்திட்டம் இதோ
சுற்றாடல் விதிமுறைகள் மற்றும் அது சார்ந்த கொள்கைத் தயாரிப்புக்களை வலுப்படுத்துவதற்கும் முன்னெடுத்துச் செல்வதற்கும் அரசாங்கத்திற்கு நாம் ஆதரவளிக்க வேண்டும்.
சுற்றுச் சூழல் ஒழுங்குபடுத்தல் மற்றும் கொள்கை வகுப்பை பலப்படுத்துதல் மற்றும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக்கொடுப்பதுடன் ஒத்துழைப்பையும் வழங்குவோம். கழிவு நில நிரப்பல் நடவடிக்கை, சிறியளவிலான நீர்ப்பாசனத்திட்டங்கள், வரட்சியைத் தடுக்கின்ற நீர்த்தேக்கங்கள், வரட்சியான நாளுக்காக நீரை சேகரித்து வைத்தல், உயிர்ப்பல்வகைமை தொடர்பில் மேம்பட்ட ஒழுங்குமுறைகளை ஏற்படுத்துதல் போன்ற சுற்றாடலைப் பாதுகாக்கின்ற உட்கட்டுமான திட்டங்களில் முதலிடுமாறும் ஆதரவளிக்குமாறும் நாம் ஊக்குவிக்க முடியும். இந்த முதலீடுகளுக்கு அரசாங்கம் நிதி வழங்கவேண்டும். இதற்கு தனியார் துறையினர் முன்வருவதுடன் அவர்களது அனுபவத்தையும் நிதிவளத்தையும் வழங்கி ஒத்துழைக்கவேண்டும். கழிவு முகாமைத்துவத்தின் சில கட்டங்களில் நிதி வழங்குநர்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கப்பெற்றமையை ஏனைய நாடுகளில் இருந்து பெறப்பட்ட அனுபவங்கள் எமக்கு எடுத்துணர்த்துகின்றன. சுற்றாடல் விழிப்புணர்வு தொடர்பாக பாடசாலைகள் சிறுவர்களுக்கு மேலும் சிறப்பான முறையில் கற்பிக்கவேண்டும். இந்தப் பழக்கவழக்கங்களை சிறுவர்கள் தமது வாழ்க்கைக்கும் எடுத்துச்செல்வர். தாம் பிழையெனக் காணும் விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டுகின்ற ஆற்றலை அரச சார்பற்ற நிறுவனங்கள் கொண்டிருப்பது முக்கியமானதாக இருக்கின்ற அதேவேளை தீர்வுகளை விருத்திசெய்யவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு நெருக்கி முன்வரவேண்டும். இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் போது சில அசௌகரியமான சூழ்நிலைகளும் தோன்றக்கூடும். அரசாங்கம் உட்கட்டுமானப் பணிகளை முன்னெடுக்கும் போது அவற்றை சிலருடைய காணிகளுக்குள்ளும் நிர்மாணிக்க நேரலாம். காணிகளின் விலைகள் பெறுமதிமிக்கதாகக் காணப்படுகையில் துரிதமான வளர்ச்சி காணும் ஒரு பொருளாதாரம் செலுத்த நேரிடுகின்ற அபராதமாக இதனை நோக்கமுடியும். ஏற்படக்கூடிய அபாயத்திலிருந்து மக்களை வேறிடங்களுக்கு நகர்த்த வேண்டிய நிலையும் ஏற்படலாம். அபிவிருத்திப் பங்களார்கள் புதிய பகுதிகளில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.
இந்த சிக்கல்மிக்க நிகழ்ச்சிநிரலுக்கு பங்களிப்பு வழங்குவது எவ்வாறு என்ற விடயத்தில் பொதுமக்கள் , அரசாங்கம், தனியார் துறையினர் மற்றும் அரச சார்பற்ற துறையினர் மத்தியில் தெளிவைப் பெற்றுக்கொள்வது முக்கியமானதாகும். நாம் அனைவரும் இவ்விடயத்தில் ஆர்வத்துடன் பங்கெடுக்கவேண்டும். எமது சுற்றுச்சூழல் சீர்கெட்டுப் போக நாம் இடமளிக்கும் பட்சத்தில் உள்ளக மற்றும் உலக தாக்கங்கள் மிகவும் பாரதூரமாக அமையும். விளைவுகளும் நீண்டகாலமாக நின்றுநிலைப்பதாக அமைந்துவிடும். இந்த பிரச்சனைகள் எதிர்காலச் சந்ததியினருக்கான சந்தர்ப்பங்களை கணிசமானளவில் குறைத்துவிடும். இதன் தாக்கங்கள் பொருளாதார விருத்தியை பாதிக்கும். அத்தோடு மிகவும் கஸ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்கள் ஏன் எமது வாழ்க்கைக்கான ஆயுட்காலத்தின் எதிர்பார்ப்பும் பாதிப்பிற்குள்ளாகும் ஏதுநிலை காணப்படுகின்றது.
சுற்றாடலானது அதன் முக்கியத்துவத்தை ஆண்டிற்கு ஒரு தடவை மாத்திரம் எமக்கு நினைவுறுத்துவதில்லை. மாறாக அது தினமும் நினைவுறுத்துகின்றது. யார் தவறிழைத்தவர்கள் என்று சுட்டிக்காட்டுகின்ற செய்திகளாக அன்றி உயிரிழப்புக்களை குறைப்பதற்காகவும், வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும், எமது சிறுவர்களுக்கும் அவர்களின் சிறுவர்களுக்கும் சிறப்பான சுற்றாடலை உருவாக்குதற்காகவும் ஒன்றாக இணைந்து எமது சுற்றாடலை மேம்படுத்துவதற்காக எதைச் சாதித்தோம் என்கின்ற செய்தி மிக முக்கியமான செய்தியாக வருகின்ற நாளுக்காக நான் ஏங்கிநிற்கின்றேன்.
ஒவ்வொரு நாளுமே சுற்றாடல் தினமாக அமைந்தாலே இது நடைபெறும். அனைவருக்கும் மகிழ்ச்சிமிக்க உலக சுற்றாடல் தினம் உரித்தாகட்டும்.
Join the Conversation